04 நவம்பர் 2022 – நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)

04 November 2022 - Current Affairs

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வகுப்புகளை தொடங்குவதற்கு ஏதுவாக அறிமுக வகுப்புகளை வரும் 14 ஆம் தேதியே நடத்த வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆவின் பால் விலை உயர்வு

ஆவின் பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆரஞ்சு பாக்கெட் பால் சில்லறை விற்பனையில் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு ரூ.60 ஆகவும் அரைலிட்டர் அளவில் விற்கப்படும் நிறைகொழுப்பு கொண்ட ஆரஞ்சு பால் பாக்கெட் விலை 24 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் (05.11.2022) அமலுக்கு வருகிறது.


ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு

பண்டிகை காலத்தையொட்டி, ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், எட்டு ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. பண்டிகை காலம் முடிந்த நிலையில் அந்த சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம்

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் (பி.சி.சி.) பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஆகவே, பொதுமக்களுடைய வசதிக்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலி கிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை (சனிக்கிழமை-05.11.2022) சிறப்பு முகாம் செயல்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.கோவேந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழறிஞர் நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்

தமிழறிஞரும், திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் அவர்கள் சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார். உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன் அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சொந்த ஊரான திருச்சிக்கு நெடுஞ்செழியன் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த நிலையில், நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்… “தமிழ்மொழி அறிஞரும், தமிழின அரிமாவுமான நெடுஞ்செழியன் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். நெடுஞ்செழியனின் அறிவு நூல்கள் தமிழ் சமுதாயத்தை எந்நாளும் உணர்ச்சியூட்ட செய்யும். தமிழ் மரபும். பெருமையும் காத்திடும் தமிழ் மான மறவர் என போற்றப்பட்டவர் நெடுஞ்செழியன். நெடுஞ்செழியனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – UGC-NET

யு.ஜி.சி. நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை (சனிக்கிழமை-05.11.2022) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வர்கள் அனைவரும் www.nta.ac.in இணைய தளத்துக்குச் சென்று, அதில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம். மேலும் விவரங்களுக்கு: www.nta.ac.in, [email protected] என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here