மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலியாக உள்ளது. இந்த வாட்ஸ் அப் செயலில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை எளிய முறையில் அனுப்பி கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளதால் உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களை ஈர்க்கும் வகையில் அவ்வபோது புதுபுது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ் அப்பில் ஒரு தகவலை மற்றவருக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் அந்த தகவலை டைப் செய்தோ அல்லது வாய்ஸ் மெசேஜ் மூலமாகத்தான் தெரிவித்து வந்தோம்.
ஆனால், தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்டில், வீடியோ மூலமாகவும் தகவலை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அப்டேட்டானது ஐஓஎஸ் பயனர்களுக்காக தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சாட் பாக்ஸில் உள்ள மைக்ரோபோன் ஐக்கானை தொடுவதன் மூலம் இதற்கான பயன்பாட்டை நீங்கள் பெற முடியும். இதேபோல் வீடியோ கால் பேசும்போது பயனர்கள் தங்களின் திரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஸ்கிரீன் ஷேரிங் அம்சமும் வெளியாகி உள்ளது. இந்த அப்டேட் விரைவில் ஆன்ராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.