போகிப் பண்டிகை என்பது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழமையான துயரமான நினைவுகளை அழித்துப் போக்கும் இப்பண்டிகை போக்கி எனப்பட்டது. இது நாளடைவில் போகி என்று அழைக்கப்பட்டு வருகிறது.
உண்மையாக விளக்கம்:
இந்திரனுக்கு “போகி” என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை “போகி” என்று கூறி வழிபடுவார்கள். இதைதான் நாம் போகி பண்டிகையாக கொண்டாடி வருகிறோம்.
போகியன்று செய்ய வேண்டியவை:
1. போகி பண்டிகை என்றால் நமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள், அழுக்கு, தீய குணங்கள் போன்றவற்றை முற்றிலுமாக நீக்கி, புதிய நல்ல எண்ணங்களை கொண்டு வர வேண்டும்.
2. போகி பண்டிகையன்று வீட்டிற்கு சுண்ணாம்பு பூச வேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் பூச்சி, வண்டுகள் சுண்ணாம்பினால் அங்கிருந்து ஓடி விடும் அல்லது மடிந்து விடும். இதனால் வீட்டில் இருப்பவர்கள் அதன் தொல்லைகளிலிருந்து விடுபடுவார்கள்.
3. வழக்கமாக போகியில் கடைப்பிடிக்கும் காப்பு கட்டும் சடங்கை செய்யலாம். அதாவது வீட்டு வாசலில், பின் வாசலில் மூலிகைக் காப்பான்களை கட்டி வைக்கலாம். இந்த மூலிகைக் காப்பான்களில் கட்டாயம் மாவிலை, நொச்சி, வேம்பு, ஆவாரம், மஞ்சள் கொத்து, சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி இருக்க வேண்டும். இது சிறந்த நோய்த்தடுப்பானாக இருந்து உங்களையும் உங்கள் கால்நடைகளையும் பாதுகாக்கும்.
போகியன்று செய்யக்கூடாதவை:
1. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் காற்று மாசுபடுதல் என்பது அதிகமாகி விட்டது. இந்நிலையில் போகி அன்று பழைய பொருட்களை எரிப்பது நமக்கும் நம் சுற்றியுள்ளவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
2. இந்திரன், சூரியன், வீட்டு தெய்வங்களை வரவேற்று வணங்கும் நாள் என்பதால் இந்த நாளில் மாமிசம் சமைக்கக் கூடாது.
3. மழையால் நிரம்பி இருக்கும் கிணறு, குளம் போன்றவற்றின் நீர் சுவையாகவும், சுத்தமாகவும் இருக்கும் வகையில் முன்பெல்லாம் அந்நீரில் நெல்லி, பனை போன்ற மரங்களின் துண்டை போடுவார்கள். இந்த அடிப்படை தெரியாமல் இப்போது கிராமங்களில் பெருமளவு மரங்களை வெட்டி நீரில் போடும் வழக்கத்தை செய்யவேக்கூடாது.