
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது. இதுபோன்ற பண்டிகை காலங்களில்தான் வேலை மற்றும் படிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக வெளியூர், வெளிமாநிலம் சென்று வசிப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த தீபாவளியை முன்னிட்டு இலட்சணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் சாலை வழியாக மட்டுமே செல்லும் என்றும் ஆம்னி பேருந்துகள் எக்காரணத்தை கொண்டும் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ : இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத்தொகை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
இதுகுறித்து ஆம்னி பேருந்துகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் நவம்பர் 9,10, 11 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே ஆம்னி பேருந்துகளில் ஏறிச் செல்ல முடியும். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் மட்டுமே இயக்கப்படும். மேலும், சென்னையின் முக்கிய பகுதிகளான வடபழனி, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் காவல்துறையின் உத்தரவுபடி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஆம்னி பேருந்துகளின் சங்கம் நிர்ணயித்த கட்டணத்தை தவிர கூடுதலாக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் இதன் விவரங்களை பயணிகள் இணையத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும், பயணிகள் ஆம்னி பேருந்துகள் குறித்த புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.