தமிழகத்தில் பால் விற்பனை என்றாலே முதலில் நியாபகத்தில் வருவது ஆவின் பால் தான். அந்த வகையில், ஆவின் பால் நிறுவனம் தினசரி 40 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கின்றனர். இதில் பாக்கெட் நிறத்திற்கேற்ப பால் வகைப்படுத்தபடுவது வழக்கம்.
இந்நிலையில், சமீபத்தில் பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் விளைவாக ஆவின் ஆரஞ்சு நிற பால் (நிறைகொழுப்பு பால்) பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை நவம்பர் 5 ஆம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை ஏற்றத்தை பொறுத்த வரையில், சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் ஆரஞ்சு நிற பால் (நிறைகொழுப்பு பால்) பாக்கெட்டின் விலையை மட்டும் உயர்த்தியுள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 32 லிருந்து, ரூ.35 ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41 லிருந்து, ரூ.44 ஆகவும் உயர்த்தும் நடைமுறை 05.11.2022 முதல் அமல்படுத்தப்படும்.
இந்நிலையில், இந்த ஆவின் நிறைகொழுப்பு பாலை வாங்கும் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 ஆக நாளை முதல் விற்கப்படும். இந்த ஆவின் விலை ஏற்றத்திற்கு பிறகும், தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ஆவின் நிறைகொழுப்பு பாலின் விலை ரூ. 24 குறைவு என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.