
ஓலா மற்றும் ஊபர் போன்ற தனியார் ஆட்டோ மற்றும் டாக்ஸி புக்கிங் செயலிகளுக்கு பதிலாக புதிய செயலியை உருவாக்கி தர வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்று புதிய செயலி உருவாக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஓலா , ஊபர் போன்ற தனியார் ஆட்டோ மற்றும் டாக்ஸி புக்கிங் செயலிகள் மூலமாக தனியார் நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டி வருகின்றனர். இதனால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மிகவும் குறைவான கட்டணமும், பயணிகளுக்கு அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக தமிழகத்தில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக அரசு புதிய செயலியை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் தொடர்பாக கூடுதல் போக்குவரத்து ஆணையர் முன்னிலையில் Taxi’na என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கத்துக்கும் இடையே சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தான் இந்த செயலியை உருவாக்குவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது .இது தொடர்பாக Taxi’na குழு முதன்மை செயலாளரிடம் சுருக்கமான விளக்கத்தை அளித்து உள்ளது.
ALSO READ : ஹரிஷ் கல்யாண் ‘பார்க்கிங்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழு!
அதன்படி செயலியை எப்படி உருவாக்குவது, அதில் ஆட்டோ டிரைவர்கள் பதிவு செய்வது எப்படி, அது எப்படி மக்களுக்கு உதவும், கமிஷன் என்ன, எப்படி மக்கள் புக் செய்ய முடியும் என்பது போன்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. அதோடு தனியார் நிறுவனம் இதற்கான செயலியை உருவாக்கி நிர்வகிக்கலாம் என்றும், ஆனால் முழு கட்டுப்பாடும் தமிழக அரசின் கீழ் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ‘TATO’ என்ற புதிய செயலியை தனியார் நிறுவனம் உருவாக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதோடு இந்த செயலி உருவாக்கும் தனியார் நிறுவனம் இதற்காக ஓட்டுநர்களிடம் எந்தவித கமிஷனும் வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அந்த நிறுவனம் ‘TATO’ என்ற ஆட்டோ மற்றும் டாக்சி புக்கிங் செயலியை உருவாக்கி தர ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
எனவே, இதன் பிறகு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நியாயமான கட்டணம் மற்றும் வருமானம் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பொது மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது