தமிழக மாநகராட்சியில் உள்ள 2,534 காலிப்பணியிடங்களை TNPSC மூலம் நிரப்ப வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

Tamil News 2534 vacancies in Tamil Nadu Corporation should be filled by TNPSC Ramadoss insists

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தேர்வு செய்து வருகிறது. அதன்படி, தமிழக நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் செயல்படும் 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 534 தொடக்க நிலை பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(TNPSC) மூலமாக தேர்வு செய்யப்படாமல் நகராட்சி நிர்வாகமே அண்ணா பல்கலைகழக கழகத்தின் மூலம் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வை நடத்தி அதன் மூலம் தேர்வு செய்ய உள்ளதாக கடந்த 14 ஆம் தேதி அரசாணையை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டு வரும் தமிழக அரசின் இந்த முடிவு மிகவும் தவறானது. பொதுவாக தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குறிப்பிட்ட வகை பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே தேர்வு செய்து வந்தது. இவ்வாறு தேர்வு செய்யும் போது பல்வேறு ஊழல்கள் மற்றும் குளறுபடிகள் ஏற்படுவதாக கூறி, இனி வரும் காலங்களில் மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் இடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்வு செய்யப்படும் என்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தற்பொழுது தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த முடிவு பல்வேறு ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கலாம். பொதுவாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் போது முதல் தொகுதி பணிகளுக்கும், இரண்டாம் தொகுதி பணிகளுக்கும் மட்டுமே நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தொடக்க நிலை பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பாடாமல் இருந்தது. ஆனால், தற்பொழுது நகராட்சி நிர்வாகத்துறை மூலம் தேர்வு செய்யப்படும் தொடக்க நிலை பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நேர்முகத்தேர்வில் ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வழங்கி அவர்களை தேர்வு செய்யும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

ALSO READ : “அஜயன் பாலாவின் மைலாஞ்சி” திரைப்படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா..!

தமிழ்நாடு அரசு ஒரு அரசாணையை வெளியிட்ட பிறகுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள் ஆனால், நகராட்சி நிர்வாகத்துறையில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 534 பணியிடங்களை நேரடியாக தேர்ந்தெடுக்கும் அரசாணை கடந்த நவம்பர் 14 ஆம் தேதி தான் வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை தீர்மானிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் அவசரம் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் ராமதாஸ் அவர்கள்.

மேலும், அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்பொழுது வேலைவாய்ப்புகள் குறைந்த அளவே காணப்படுவதால் இந்த பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நேர்மையாகவும், நியாயமான முறையிலும் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் இருக்கும் சுமார் 2 ஆயிரத்து 534 பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் இந்த காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தபட கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்