
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்பொழுது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் நேற்று 35 மாவடங்களில் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிகமாக மழை பெய்யும் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தற்பொழுது வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மழை பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
ALSO READ : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு..!
மேலும், தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்படும் அனைத்து விதமான சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, கடலோர மாவட்டங்களில் மட்டும் 121 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 400 பேர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.
மழையின் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் வகையில், தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்து 967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகிறது. பாதுகாப்பு கருதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் இதுவரை பெய்த மழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் இனி வரும் காலங்களிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு தமிழக அரசு அதற்கேற்ற நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.