
தீபாவளி பண்டிகை வர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், துணிக் கடைகள், பட்டாசு கடைகள் மற்றும் பேக்கரிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்ல எதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்தது. அதன்படி, சென்னை போன்ற பிஸியான நகரங்களில் நேற்று முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல பலரும் ஆர்வம் காட்டி வருவதால் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை முதலே பேருந்து நிலையங்களில் கூட்டம் வர தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு பேருந்து நிலையங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில், இந்த தீபாவளி பண்டிகைக்கும் வழக்கமாக இயக்கபடும் பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ALSO READ : திருப்பதி எழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு : தரிசன டிக்கெட்டுக்கள் இன்று ஆன்லைனில் வெளியீடு!
சென்னையில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் அனைத்தும் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பஸ் நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் பயண கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து, தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், தீபாவளி முடிந்த பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காவும் சென்னையில் இருந்து வருகிற 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 மாநகர பேருந்துகள் இயக்க உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துறை அறிவித்துள்ளது. மேலும், இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் சொகுசு பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டண முறையே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.