
ஆண்டுதோறும் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமியை தரிசிக்க தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில், நடுப்பு ஆண்டுக்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(நவம்பர் 16) மாலை 5 மணியளவில் திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாளை திறக்கப்பட இருக்கும் கோவில் நடையை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திறந்து வைத்து தீபாராதனை காட்ட உள்ளார். அதன்பின், சமரிமலையின் மிகவும் சிறப்புமிக்க 18 ஆம் படிக்கு கீழே அமைந்திருக்கும் நெருப்பு ஆழியில் கற்பூரம் ஏற்றி தீ மூட்டப்படும். பிறகு, நாளை மறுநாள் அதாவது நவம்பர் 17 ஆம் தேதி முதல் அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் நடையை திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளை தலைமை ஏற்று நடத்துவார்.
ALSO READ : காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற வாய்ப்பு..! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!!
மேலும், வெள்ளிக்கிழமை 12 மணி வரையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் போன்ற பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு பின்பகல் 1 மணியளவில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை அடைக்கப்படும். அதன்பின், அன்று மாலை 4 மணியளவில் கோவிலின் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 10 மணியளவில் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் முக்கிய பூஜையான மண்டல பூஜை வருகிற டிசம்பர் 27 ஆம் தேதியும், மகர விளக்கு பூஜையானது வருகிற ஜனவரி 15 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சபரிமலைக்கு வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி விரதம் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு நிலக்கல்லில் முன்பதிவு செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பூஜையை முன்னிட்டு சபரிமலை கோவிலில் 7,500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.