
தமிழக அரசு பெண்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்கள் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில், மிகவும் முக்கியமான மற்றும் பெண்களின் வரவேற்பை பெற்ற ஒரு திட்டம்தான் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டம். இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் விண்ணபித்த சுமார் 1 கோடியே 63 லட்சம் பேரில் தகுதியுடையவர்களாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. இதில், நிராகரிக்கபட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இதுவரை இந்த திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
ALSO READ : தீபாவளி பண்டிகை எதிரொலி : சென்னையில் 60 மாநகர பேருந்து இயக்கம்!
அதன்படி, இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த விண்ணபங்கள் தற்பொழுது ஒவ்வொன்றாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. இதையடுத்து, மகளிர் உரிமைத்தொகையானது ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் தீபாவளி பண்டிகை 12 ஆம் தேதி வர இருப்பதால் மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே நவம்பர் 10 ஆம் தேதி(இன்று) வழங்கப்படும் என்றும் மேலும், மேல்முறையீடு செய்தவர்களில் புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக் இணைந்த பயனாளர்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழா இன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பயனாளிகளுக்கு உரிமைத்தொக்கை வழங்குவார்.