நம் அன்றாட உணவில் சேர்க்கக் கூடிய அத்தியாவசிய பொருளாக தக்காளி உள்ளது. ஆனால், கடந்த மாதம் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக தக்காளியின் விளைச்சல் சரிவர இல்லாததால் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் மாநிலங்களுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதே தக்காளியின் விலை ஏற்றத்துக்கு காரணமாக உள்ளது என்று வியாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதன்பின், தக்காளியின் வரத்து சற்று அதிகரித்த காரணத்தினால் தக்காளியின் விலை குறைந்து எப்பொழுதும் போல ஒரு கிலோ ரூ.20 முதல். ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்பொழுது இல்லத்தரசிகளுக்கு மீண்டும் தலையில் இடி விழுந்தது போல் தற்பொழுது பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. முன்னதாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்பட்ட நிலையில், இன்று சற்று விலை உயர்ந்து, ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சின்ன வெங்காயத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் வரத்து குறைவின் காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும், இனி வரும் காலங்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.